RSS Feed

சிவபெருமானின் “சைவ மத பாலியல் புரட்சி”

நன்றி

http://kalaiy.blogspot.co.uk/2011/12/blog-post_08.html

சிவபெருமானின் “சைவ மத பாலியல் புரட்சி”

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !] (நான்காம் பாகம்)

“சிவன், சக்தியுடன் சேர்ந்திருக்கும் பொழுது தான், படைத்தல் தொழிலை செய்யும் வல்லமையை பெறுகிறான்.” – சௌந்தர்ய லாஹிரி 

பாடசாலை மாணவர்களுக்கான, சைவ சமயப் பாடத்தில், அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சிவனும், சக்தியும் சரி பாதியாக காட்டும், “அர்த்த நாரீஸ்வரர்” உருவமானது, சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப் படுகின்றது. பாடசாலையை விட்டு வெளியில் வரும் மாணாக்கர்களுக்கு, “பெண்ணைத் தெய்வமாக மதித்த சமூகம், எதற்காக இன்று அடிமைப்படுத்துகின்றது?” என்ற நிதர்சனம் முகத்தில் அறையும்.

சைவ மதத்தின் பெயரால், “ஒரு சதிப்புரட்சியை நடத்தி”, அதிகாரத்தை கைப்பற்றிய, “சைவ சித்தாந்தவாதிகள்” பற்றி எமது பாடநூல்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வரலாற்று இருட்டடிப்பால் தான், சமூகத்தில் இத்தனை குழப்பம். சிவனை (சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் இன்று இல்லை. சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டம் மாறி விட்டது. இன்றுள்ள சைவர்கள் சிவனை ஆகம விதிப்படி வழிபடுகின்றனர். அதனால் தான், பிற தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாது, இந்து மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்.

சிவனை அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் எத்தகைய மக்கள்? நிச்சயமாக அவர்கள் நம்மைப் போல இருக்கவில்லை. ஆதிச் சைவர்கள் போல வாழ்வதற்கு இன்று யாரும் துணிய மாட்டார்கள். இங்கே அவர்களின் வாழ்க்கை நெறிகளை விளங்கப் படுத்தினால், “காட்டுமிராண்டி சமுதாயம்” என்று வெறுத்து ஒதுக்குவார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்தில் நிலவும் பாலியல் சுதந்திரத்தை, “கலாச்சார சீரழிவாக” கருதும் தமிழர்கள் நம்மில் எத்தனை பேர்? சைவ சமயத்தை பின்பற்றிய, இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அது சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை விட அதிக சுதந்திரத்தை கொண்டிருந்தது. அன்றைய சைவர்கள், அதனை காமமாக கருதவில்லை. கடவுளை அடைய, முக்தி பெற சிறந்த வழியாக நம்பினார்கள்.

அதனை எடுத்துக் காட்டுவது தான், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் சிவலிங்கம். ஆணும், பெண்ணும் இணைந்து உயிரை உற்பத்தியாக்கி, இனப்பெருக்கம் செய்வதை இயற்கையின் இரகசியமாக கருதினார்கள். அதனை எடுத்துக் காட்டவே, ஆண்குறியும், பெண்குறியும் இணைந்த சிவலிங்கத்தை வழிபட்டார்கள். இயற்கை போதிக்கும் தெய்வத் தன்மையை மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆரியர்களின் பிராமண மதமும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட சைவ சித்தாந்த பிரிவும், இந்த தத்துவங்களை மூடி மறைத்தன. பிற்காலத்தில், இந்திய உபகண்டத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவ மதமும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருந்தன. அவர்கள் புகட்டிய கலாச்சாரத்தை, நாம் இன்றைக்கும் “தமிழர் கலாச்சாரம்” என்று பெருமையாகப் பேசித் திரிகிறோம்.

பண்டைய சைவ மதத்தை, தாந்திரிய மதம் என்றும் அழைப்பார்கள். ஆணையும், பெண்ணையும் குறிக்கும், சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் கடவுளராக வழிபடப் பட்டனர். “சிவனின்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை.” என்ற தத்துவமும் அப்போது தோன்றியது. உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த, பண்டைய சமூக மக்கள், ஆண்குறியை மட்டும் தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர். கிரேக்கத்திலும், தென் இத்தாலியிலும் வாழ்ந்த மக்கள், மீனை அதன் குறியீடாக பயன்படுத்தினார்கள். ஆதி கிறிஸ்தவர்களும் அதனை பின்பற்றினார்கள்.

பண்டைய இந்தியர்கள், ஆணின் பிறப்புறுப்பையும், பெண்ணின் பிறப்புறுப்பையும் சிவலிங்க வடிவில் வணங்கியது முற்போக்கான விடயமாக கருதப் பட வேண்டும். ஆதிச் சைவர்கள், அந்தளவுக்கு நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தனர். மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த ஐரோப்பியர்கள், “ஆணும், பெண்ணும் சமம்” என்று, எமக்குப் போதிக்கும் அளவுக்கு, நாம் எமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். பெண் விடுதலையை, பாலியல் சுதந்திரத்தை, ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியர்கள் அதனை கடைப்பிடித்து ஒழுகி வந்தனர். உண்மையில், நாம் இன்று எதனை தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாக புரிந்து கொள்கிறோமோ, அது தான் ஐரோப்பியரின் கலாச்சாரம் என்பது எமக்குத் தெரியாது.

திபெத்தில், கி.பி. 7 ம் நூற்றாண்டில் தான் பௌத்த மத அரசு உருவானது. அதற்குப் பிறகு தான், திபெத் என்ற தேசம் உலக வரைபடத்தில் தோன்றியது. அநேகமாக, இந்திய உப கண்டத்தில் பௌத்த மதம் மடிந்து கொண்டிருந்த காலத்தில் தான், திபெத்திலும், இலங்கையிலும், பேணிப் பாதுகாக்கப் பட்டது. இந்திய உப கண்டத்தில் பரவிய பிராமண மதம் (அல்லது இந்து மதம்) பௌத்தம், சமணம் போன்ற மதங்களை கூடிய மட்டிலும் அழித்து விடுவதில் முனைப்புக் காட்டியது.

பௌத்த, சமண மதங்களை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுடன் ஒப்பிடலாம். அதாவது, மதத்தை தோற்றுவித்தவர்கள், நிறுவன மயப் படுத்தியவர்கள், புனித நூல்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்தன. அதே நேரம், இந்த மதங்களில் ஆர்வமுள்ள அனைவரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பிராமண மதம் (இந்து மதம்) அவ்வாறானது அல்ல. அந்த மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் பிறக்கும் ஒருவர் மட்டுமே பிராமணர் (அல்லது இந்துவாக) இருக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், யூதர்கள் போன்று, பிராமண மதத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். அவர்களால், நிறுவன மயப் படுத்தப் பட்ட, பௌத்த, சமண மதங்களை எதிர்த்துப் போராடி இருக்கவே முடியாது. அது எவ்வாறு சாத்தியமானது?

அன்று, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், தாந்திரிய மதங்களை பின்பற்றினார்கள். இந்து மதத்திற்கு முந்திய பழமையான மதமான, தாந்திரிய மதத்தில், சிவனை வழிபடுவோர், சக்தியை அல்லது காளியை வழிபடுவோர், என்று சில பிரிவுகள் இருந்துள்ளன. இந்திய பழங்குடியின மக்களின் கடவுளரை, நமது கால இந்துக்கள் “சிறு தெய்வங்கள்” என்று அழைப்பார்கள். அன்றைய பிராமணர்கள், சிவ பெருமான் போன்ற “சிறு தெய்வங்களை”, பெருந் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். அவற்றை பிராமண மதத்தில் இணைத்துக் கொண்டார்கள். தமிழகத்திலும் இதே காலகட்டத்தில் தான், பக்தி இயக்கம் என்ற பெயரில் சைவ சித்தாந்த மதம் தோன்றியது. திருஞான சம்பந்தர் போன்ற சமய குரவர்களும், புதிதாக முளைத்த பல்லவ ஆட்சியாளர்களும் பக்தி இயக்கத்தை நெறிப் படுத்தினார்கள். அவர்களது ஒரே குறிக்கோள், பெரும்பான்மை இந்தியர்கள் பின்பற்றிய பௌத்த, சமண மதங்களை அழித்து, அந்த இடத்தில் பிராமண மதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.

இந்தியாவில் ஆரிய-பிராமண மேலாதிக்கத்தை சாத்தியமாக்கிய இரண்டு முக்கிய அம்சங்களாவன:
1 . பெரும்பான்மை இந்தியர்கள் வழிபட்ட தாந்திரியக் கடவுளரை ஏற்றுக் கொண்டமை.
2 . உள்ளூர் மக்களின் மொழிகளிலேயே சமயப் பிரச்சாரம் செய்தமை.
இவ்வாறு இடத்திற்கேற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் பிராமணர்கள். பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் பரவிய பொழுது, பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் பிராமண இனத் தூய்மை வேறு பெயர்களில் (சாதி) பேணப் படுகின்றது. பிராமணர்களைப் பொறுத்த வரையில், இன மேலாதிக்கமே முக்கியமானது. மதம், கொள்கை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்த வகையில், சூத்திரர்களின் கடவுள்களை இணைத்துக் கொண்டு, இந்து மதம் என்றொரு புதிய மதத்தை உருவாக்குவது கடினமாக இருந்திராது.

நவீன கால ஐரோப்பாவில், “இனவாதம்” அரசியல் கோட்பாடாக உருவானது. ஆனால், இனவாத சிந்தனையின் வேர்கள், இந்திய பார்ப்பனீய மரபிற்குள் காணப்படுகின்றன. இல்லாவிட்டால், திபெத் சென்று, தூய ஆரிய இனம் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கு ஹிட்லர் பேரவாக் கொண்டிருப்பானா? அந்தக் காலத்தில், இந்தியா பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால் தான் ஹிட்லரின் ஆராய்ச்சியாளர்களால் இந்தியா வர முடியவில்லை. நவீன கால இனவாதிகள் எதிர்பார்த்த அளவிற்கு, திபெத் இனத் தூய்மை பேணும் நாடாக இருந்ததில்லை.

திபெத் தோன்றிய காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், மதம் சார்ந்த அரசியலே கோலோச்சியது. கி.பி. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் இந்து மத மேலாண்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. மத்திய கால ஸ்பெயினில் நடந்த Inquisition போன்று, இந்தியாவிலும் பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. அவ்வாறான சூழலில், திபெத்தியர்கள் “உலகின் ஒரேயொரு பௌத்த தேசத்தை” ஸ்தாபித்தனர். (சில நூற்றாண்டுகளுக்கு பின்னர், கௌதம புத்தர் பிறந்த மண்ணில், நேபாளம் என்ற “உலகின் ஒரேயொரு இந்து தேசம்” பிரகடனம் செய்யப் பட்டது.) இந்து மதம் போன்றே, திபெத்திய பௌத்த மதத்திற்கும் “ஆன்மீக நெருக்கடி” தோன்றியது. பௌத்த மத ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, உள்ளூர் மக்கள் வழிபட்ட தெய்வங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தான், திபெத்தில் இன்றைக்கும், சிவனின் அர்த்த நாரீஸ்வரர் உருவம் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

திபெத்திய பௌத்த மதமும், இந்து மதமும், “மத நீக்கம் செய்யப்பட்ட சிவனை” தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றன. அதாவது, ஆதிச் சைவ சமயமான தாந்திரிய மதத்தில் இருந்து, சிவன் தனியே பிரித்தெடுக்கப் பட்டுள்ளார். காந்தியை தேசபிதாவாக்கி விட்டு, காந்தீயத்தை புறக்கணிக்கும் அயோக்கிய அரசியல் இது. ஆதிச் சைவர்களுக்கும், நவீன சைவர்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டு பிரிவினரும் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அது மட்டுமே ஒரேயொரு ஒற்றுமை.

பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட, சிவனை ஆகம விதிப்படி வணங்கும் நவீன சைவர்கள், தாந்திரிய மதம் பற்றி கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். இந்து மதம், அது குறித்த தகவல்களை இருட்டில் வைத்திருந்தது. தாந்திரிய மதம் என்றால், பில்லி சூனியம், பித்தலாட்டம் செய்யும், காட்டுமிராண்டிகளின் மதம் என்று பரப்புரை செய்தது. “தந்திரம்” என்ற சொல் கூட அதிலிருந்து வந்திருக்கலாம். சமீப காலத்தில், ஐரோப்பியர்கள் தாந்திரிய மதம் மீது அளவு கடந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குலகில், “தாந்திரா” என்பது பாலியல் சமாச்சாரங்களுக்கு சூட்டப்படும் பெயராகி விட்டது. பாலியல் இச்சை காரணமாகவே, பல ஐரோப்பியர்கள் இந்திய தாந்திரீக மதத்தை ஓரளவு பின்பற்றும் போக்குக் காணப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட இரண்டு தரப்பட்ட பார்வைகளும் தவறானவை. பண்டைய காலத்தில் இடம்பெற்ற சில வழிபாட்டு முறைகள், நமது காலத்தில் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால், தாந்திரிய மதத்தை அழிக்கும் நோக்குடன், அந்த மதத்தை பின்பற்றுவோரை சூனியக் காரர்கள் என்று இழிவு படுத்தினார்கள். இதே போன்ற நிலைமை, ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவிய காலத்திலும் காணப்பட்டது. கிறஸ்தவ மதம் வருவதற்கு முன்னர், இயற்கை வழிபாடு ஒரு மதமாக இருந்தது. அந்த மதத்தின் புரோகிதர்களும், நம்பிக்கையாளர்களும், சூனியக்காரர்கள் என்று தூற்றப் பட்டனர். இயற்கை வழிபாடு செய்வது கண்டுபிடிக்கப் பட்டால், உயிருடன் கொளுத்தப் பட்டனர். இந்தியாவிலும், ஏறக்குறைய இதே மாதிரியான அடக்குமுறை காரணமாக, தாந்திரியம் எனப்படும் ஆதிச் சைவ சமயம் மக்கள் மனதில் இருந்து அகற்றப் பட்டு விட்டது.

தாந்திரிய மதம், “ஆண்,பெண் புணர்ச்சியில் இறைவனைக் காணலாம்” என போதித்தது. (மேற்குலகில் ரஜ்னீஷ் சாமியார் இதைத் தான் திரிபு படுத்தி போதித்துக் கொண்டிருந்தார்.) ஆயிரம் வருட காலமாக, பாலியல் உணர்வு அடக்கப்பட்ட சமுதாயத்தில் மட்டுமே, இதெல்லாம் தவறாகத் தெரிகின்றது. ஆண், பெண் உறவுகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத, பண்டைய இந்திய சமுதாயத்தில், அது ஒரு சாதாரணமான நிகழ்வு. அதே நேரம், கலவி இன்பத்திற்கு கூறப்பட்ட தத்துவார்த்த விளக்கங்கள், ஐரோப்பிய தாந்திரீய பக்தர்களால் புறக்கணிக்கப் படுகின்றன. தாந்திரிய மதம் விளக்கிய, உடலுறவு எனப்படும் இயற்கையின் இரகசியம், இன்றைக்கும் கோயில் கோபுரங்களில் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அவற்றை எல்லாம் “அசிங்கமானது” என்று சொல்லி ஒதுக்கினார்கள். நாமும் அவர்களைப் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். பிராமண இந்துக்கள், தமது இன மேலாதிக்க அரசியலுக்காக, எமது பண்பாட்டுப் பெருமைகளை மறைத்தார்கள். ஆங்கிலேயர்கள், அதனுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கருத்துகளையும் எம் மீது திணித்து, “தமிழர் கலாச்சாரம் என்றால் இது தான்” என்று மூளைச் சலவை செய்தார்கள்.

One response »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s